ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

06.09.2009

வம்பாகீரப்பாளையத்தில் மீனவர்கள் மோதல்



மீனவப் பகுதியான வம்பாகீரப்பாளையத்தில் இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இரு கோஷ்டிகளுக்கிடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் அப்பகுதியில், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 24 மணிநேரமும், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மீனவர்களுக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அங்காளம்மன் கோயில் வீதியில் நின்று கொண்டிருந்த கரிகாலனை அவ்வழியாக சென்ற சுப்பிரமணியன், ராஜீ ஆகியோரை பாட்டிலால் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த இரு கோஷ்டிகளும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சுப்பிரமணியன், ராஜீ ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இதனால் வம்பாகீரப்பாளையம் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்லால் தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்



கண் தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கம்பன் கலையரங்கத்திலிருந்து துவங்கிய விழிப்புணர்வு நடைபயணத்தை அமைச்சர் கந்தசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். புதுவையைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மு.ராஜன் ஊர்வலத்தை வழிநடத்தினார். கண் தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளின் வழியே மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.



ஐந்தாவது தூண் கூட்டம்



லஞ்சம் கொடுத்தல் மற்றும் வாங்குதலால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐந்தாவது தூண் இயக்கம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இயக்கத்தின் புதுச்சேரியின் முதற்கூட்டம் ரெவேய் சொசியால் சங்க வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து உறுப்பினர்களின் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினர்களின் கருத்துப்பதிவுகளும், லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட கருத்துப்பதிவுகளும் இடம்பெற்றன.



அரசு பொது மருத்துவமனை கருத்தரங்கு



இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம் ஆகியவை சார்பில் மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளில் ஏற்படும் நோய்தொற்று மற்றும் அவைகளைத் தடுக்கும் முறைகளில் செவிலியர்களின் பங்கு என்ற தலைப்பில் செவிலியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு இயக்குனர் ரங்கநாத் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மைய மருத்துவர் உத்திராபதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் ஏற்படும நோய் தொற்றுகள் குறித்தும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏற்படும் நோய் தொற்று பற்றியும் அதனுடைய பின்விளைவுகள் பற்றியும் மற்றும் இவற்றில் செவிலியர்களின் மகத்தான பங்குகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இது சம்பந்தமாக செவிலியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விளக்கவுரையாற்றிய மருத்துவர் உத்ராபதிக்கு கருத்தரங்க இயக்குனர் ரங்கநாத் நினைவுப் பரிசு வழங்கினார். சிறந்த மருத்துவ சேவையாற்றியதற்காக ஓய்வுப் பெற்ற செவிலியர் பயிற்சிப் பள்ளியின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் நீலாயதாட்சி, ஓய்வுப் பெற்ற தலைமை செவிலியர் கண்ணகிசங்கரன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அரசு பொது மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்கள், தலைமைச் செவிலியர்கள், செவிலியர்கள் மற்றும் திரளான செவிலிய மாணவியர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



செந்தில் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா



சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள செந்தில் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி டீன் காசிநாதன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஞானம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ - மாணவியர்களுக்கு பட்டிங்களை வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய அவர், “ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் முக்கியப் பொறுப்பு உள்ளது. ஆசிரியர்களின் பணி நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வரப்போகும் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்றார். விழாவில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய விலங்கியல் பேராசிரியர் குமரன், கல்லூரி முதல்வர் மைதிலி, செயலாளர் தண்டபானி மற்றும் திரளான ஆசிரியர்களும், மாணவ - மாணவியர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.



வில்லியனூர் மாதா ஆலய சிலுவைப் பாதை நிலைகள் திறப்பு




வில்லியனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாதா ஆலயத்தில் கடந்த 1912-ஆம் ஆண்டு குளம் நிறுவப்பட்டது. இதன் சுற்றுப்பாதையில் அனைத்து சமய பக்தர்களும் வேண்டுதல்கள் நிறைவேற தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இங்கு ஏசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையில் சிலுவைப் பாதை நிலைகள் இதுவரை படங்களாகவே அமைக்கப்பட்டிருந்தன. தற்போது இவை அகற்றப்பட்டு, மாதா குளத்தைச் சுற்றி ஏசு இறப்பதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சிலுவைப் பாதை நிலைகள் சிற்ப வடிவில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த பல மாதங்களான நடைபெற்று வந்த இப்பணி நிறைவடைந்ததையொட்டி இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. புதுவை மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கலந்து கொண்டு சிலுவைப்பாதை நிலைகளை அர்ச்சித்து திறந்து வைத்தார். முன்னதாக விழாவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஏராளமான கிறித்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறைவழிபாடு செய்தனர்.

சனி, 5 செப்டம்பர், 2009

சுப்ரீம் தொலைக்காட்சி - ஒரு பார்வை

பிரெஞ்சிந்தியாவின் ஜன்னல் என்று பண்டித ஜவஹர்லால் நேருவால் வர்ணிக்கப்பட்ட பெருமைக்குரிய பகுதி நம் புதுச்சேரி. இயற்கை எழில் கொஞ்சும் வங்கக்கடலோரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், சுண்ணாம்பாறு, அரிக்கமேடு, கீழுர் என்று பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டு அமைதி பூமியாகவும், ஆன்மீக பூமியாகவும் விளங்கி வருகின்றது. நீண்ட, நெடிய அரசியல் வரலாற்றைக் கடந்து இன்றளவும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும், பல்வேறு மொழி பேசும் மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் புண்ணிய பூமியாய் விளங்கி வருகிறது புதுச்சேரி.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைப் பெற்ற புதுச்சேரியின் புகழை பறைசாற்றும் வகையிலும், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தவும், கலை, இலக்கியம், மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் மக்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திலும் சுப்ரீம் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. செய்திகள், கலை, இலக்கியம், மருத்துவம், வணிகம், மகளிர் மேம்பாடு, ஆன்மீகம், பொழுதுபோக்கு என்று அனைத்து அம்சங்களைக் கொண்ட பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சுப்ரீம் டி.வி. புதுச்சேரி மக்களின் மனதில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.

எமது தொலைக்காட்சி பற்றிய தகவல்கள், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், புதுச்சேரியில் நடைபெறும் அன்றாட செய்திகள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த புதிய வலைப்பதிவு (supremetelevision.blogspot.com) தொடங்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கி எங்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகி,
சுப்ரீம் தொலைக்காட்சி
159, முதல் தளம், மிஷன் வீதி,
புதுச்சேரி - 1.தொலைபேசி: 0413-2226989.